Published Date: September 8, 2025
CATEGORY: CONSTITUENCY
கிளைவுட் சேவைக்கான செலவுத் தொகைக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ₹ 15 லட்சம் வரை டேட்டா வவுச்சர் வழங்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:
கிளைவுட் கட்டமைப்பு செலவுகளை குறைப்பதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவாக வளர்வதற்கும், எளிதாக புதுமைகளை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் 2025-26 நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் என மூன்று ஆண்டுக்கு ரூபாய் 15 லட்சம் வரை கிளைவுட் சேவைக்கான செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும். அதேபோல் அமேசான் இணைய சேவை (எ.டபிள்.யு.எஸ்) மைக்ரோசாப்ட், அஷூர், கூகுள் கிளவுட், ஆரக்கில், ரயில்டெல், சிஃபி போன்ற முன்னணி உலகளாவிய கிளவுட் சேவை நிறுவனங்களில் ஐந்து சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்டண தள்ளுபடி கிடைக்கும் இத்திட்டத்தின்கீழ் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஐடி என்டி மையம் மற்றும் எல்காட் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு info@elcot.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும் இவ்வாறு இதில் தெரிவித்துள்ளார்.
Media: Hindu Tamil